2024ம் ஆண்டிற்கான பத்திரிகை சுதந்திர குறிகாட்டியை வெளியிட்டுள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு இலங்கையை 150 வது இடத்தில் பட்டியலிட்டுள்ளது. 2023ம் ஆண்டு இலங்கை 135வது இடத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பத்திரிகை சுதந்திர விடயங்கள் 2009ம் ஆண்டுவரை அந்த நாட்டில் காணப்பட்ட உள்நாட்டு யுத்தத்துடன் தொடர்புபட்டவையாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு தமிழ் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டவேளை பல பத்திரிகையாளர்களிற்கு எதிராக இடம்பெற்ற இன்னமும் தண்டிக்கப்படாத வன்முறைகுற்றங்களிற்கும் பத்திரிகை சுதந்திரத்திற்கும் தொடர்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஊடகத்துறையில் பன்முகத்தன்மை இன்மை ஊடகத்துறை அரசியல் உயர் குழாத்தினை சார்ந்துள்ளமை போன்றவற்றின் காரணமாக 22 மில்லியன் மக்கள் வசிக்கும் இலங்கையில் இதழியல்துறை இன்னமும் ஆபத்தில் உள்ளது எனவும் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக ஊடக தொழில்துறையினர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமலாக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு 2015ம் ஆண்டின் பின்னர் எந்த பத்திரிகையாளரும் கொல்லப்படவில்லை ஆனால் முந்தைய கொலைகளுக்கானவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளர்கள் இன்னமும் இராணுவத்தினர் பொலிஸாரினால் திட்டமிட்ட முறையில் கண்காணிக்கப்படுகின்றார்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிற்கு செல்வதற்கு சுயாதீன ஊடகங்களிற்கு அனுமதிமறுக்கப்படுகி;ன்றது எனவும் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.