2024 ICC ஆடவர் டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணைகள் இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒன்பதாவது ICC ஆடவர் T20 உலகக் கிண்ணம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அமெரிக்காவில் மொத்தம் மூன்று மைதானங்களிலும், மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள ஆறு மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறும்.
29 நாட்கள் நடைபெறும் தொடரில் 20 அணிகள் மொத்தம் 57 போட்டிகளில் விளையாடும்.
16 போட்டிகள் லாடர்ஹில், டல்லாஸ் மற்றும் நியூயார்க்கில் நடைபெற உள்ளன.
41 போட்டிகள் கரீபியனில் ஆறு வெவ்வேறு தீவுகளில் விளையாடப்படும், அரையிறுதிப் போட்டிகள் டிரினிடாட் மற்றும் கயானாவில் நடைபெறும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்படும் மோதலானது நியூயோர்க்கின் புதிய நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 9 ஆம் திகதி நடைபெறும்.
வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியானது ஜூன் 29 அன்று பார்படாஸில் நடைபெறும்.
தொடரின் முதல் நாளான ஜூன் முதலாம் திகதி குழு ஆட்டத்தில் போட்டியினை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்கா டல்லாஸில் அண்டை நாடான கனடாவை எதிர்கொள்கிறது.
அதேநேரம், போட்டியை நடத்தும் மற்றொரு நாடான மேற்கிந்திய தீவுகள் குழு ஆட்டத்தின் இரண்டாவது நாளில் கயானாவில் பப்புவா நியூ கினியாவை எதிர்கொள்கின்றது.
இலங்கை ஜூன் 7 ஆம் திகதி டல்லாஸில் பங்களாதேஷ் அணியுடன் தனது முதல் ஆட்டத்துடன் 2024 T20 உலகக் கிண்ண போட்டிக்கான பயணத்தை ஆரம்பிக்கும்.