போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியது தொடர்பில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 9,000 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இலங்கை பொலிஸ் கடந்த 23ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பித்தது.
வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் விபத்துக்களை குறைத்தல் ஆகிய இலக்குடன், கடமையாற்றும் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான இம்முயற்சி பண்டிகைக் காலம் முழுவதும் தொடரும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது 8,747 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்றுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் விபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுப் போக்குவரத்திற்கு மேலதிகமாக ஏனைய வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். போக்குவரத்து சட்டங்களை அமல்படுத்துவதற்காக நாடு முழுவதும் போக்குவரத்து அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.