ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் 26ஆம் திகதி மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி, நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டுள்ளதாக அறிவிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
தற்போது வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதுடன், இது தொடர்பான அமெரிக்கா வின் வொஷிங்டன் பேச்சுவார்த்தையில் இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்துகொண்டுள்ளதாக அறியமுடிகிறது.
குறித்த பேச்சுவார்த்தையில் வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாக நாளை மறுதினம் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவும் அதன் பின்னர் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் அவசர பாராளுமன்ற கூட்டத்தை கூட்டி இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றத்திற்கு அறிவிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும்,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஆளுங்கட்சியில் இவ்வாரம் இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.