சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த கைப்பையை கண்டுபிடித்து, உரிமையாளரிடம் ஒப்படைத்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மெய்சி கூட்ஸ் எனும் 11 வயது சிறுமி நதிக்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு கரை ஒதுங்கியிருந்த ஒரு பையை கண்டுள்ளார். அதில் பேனாக்கள், சில்லறை நாணயங்கள், உதட்டு சாயம், ஆபரணங்கள், சாவி, சில மாத்திரைகள் என பல பொருட்கள் இருந்துள்ளன.
அதில் இருந்த சில கடனட்டைகளில் 1993 வருடம் குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்பையின் மேலே இருந்த சில அடையாளங்கள் மற்றும் உள்ளே இருந்த பொருட்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உரிமையாளரை அவர் தேட தொடங்கினார்.
தனது நீண்ட தேடலில் அப்பையின் உரிமையாளரான ஆட்ரியை கண்டு பிடித்து, உடனே அவரை தொடர்பு கொண்டு அப்பையை அவரிடமே சேர்த்தார்.
இது குறித்து ஆட்ரி, ‘நான் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்கள் ஆகியும் அது அப்படியே உள்ளது. நான் தொலைத்த ஒரே பை இதுதான்’ என தெரிவித்தார்.
‘சமூக வலைதளங்களின் தாக்கமும், பயன்பாடும் நம்ப முடியாததாக இருக்கிறது’ என மெய்சியின் தாயார் கூறினார்.
மெய்சியின் நேர்மைக்கும், உரிமையாளரிடம் பொருளை ஒப்படைக்க அவர் எடுத்த முயற்சிகளுக்கும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.