இந்த ஆண்டு ஆரம்பித்து 38 நாட்களில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதால் பல வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆதற்கமைய, இந்த ஆண்டு ஆரம்பித்து 38 நாட்களில் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 7ஆம் திகதி வரை நடந்த வீதி விபத்துகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் இயக்குநர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
நேற்று குருநாகல் – தொரடியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியில், தோரயாய பகுதியில் இடம்பெற்றிருந்த பஸ் விபத்தில் 4 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் காயமடைந்த 20க்;கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு 3 ஆண்களும் ஒரு பெண்ணும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். ஏனையோர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸின் மீது பின்னால் வந்த பஸ், வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மோதி விபத்துக்குள்ளானமை சுட்டிக்காட்டத்தக்கது.