இந்தியாவின் கோவா மாநிலத்தில் வாடகை வீட்டில் தனது நான்கு வயது மகனைக் கொன்ற தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமை நிறைவேற்றுஅதிகாரியான பெண் நேற்று செவ்வாய்க்கிழமை (09) கைது செய்யப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் தனது மகனை கொலை செய்து உடலை பயணப் பைக்குள் திணித்து, அந்த வாடகை வீட்டின் உரிமையாளர்கள் ஏற்பாடு செய்து கொடுத்த வாகனத்தில் கர்நாடகாவுக்குச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பெண் தங்கியிருந்த வாடகை வீட்டைச் சுத்தம் செய்த ஊழியர், இரத்தக் கறையைப் பார்த்ததை அடுத்து இக்குற்றச் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தகவல் அறிந்து வாடகை வீட்டுக்கு விரைந்த கோவா பொலிஸார், வீட்டைச் சோதனை செய்ததுடன் கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த பிறகு மகன் இல்லாமல் பெண் தனியாக அங்கிருந்து சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வாடகை வீட்டின் உரிமையாளர்கள் வாகன சாரதியின் தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். வாகன சாரதியை தொடர்புகொண்டு தொலைபேசியை பெண்ணிடம் கொடுக்கும்படி பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மகனைப் பற்றி பெண்ணிடம் கேள்வி எழுப்பியபோது மகனைத் தமது தோழியின் வீட்டில் விட்டுச் சென்றதாக அப்பெண் கூறியுள்ளார்.தோழியின் முகவரியை பொலிஸார் கேட்டபோது போலி முகவரியை பெண் ஏமாற்றியுள்ளார்.
அப்போது வாகனம் கர்நாடகா மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் இருந்தது. அருகில் இருந்த பொலிஸ் நிலையத்துக்குச் சாரதி வாகனத்தை ஓட்டிச் சென்றார். அங்குள்ள பொலிஸ் அதிகாரி பெண்ணின் பையை சோதனையிட்டனர்.
இதன்போது சிறுவனின் உடல் இருந்தது கண்டு அதிர்ந்துள்ளனர். தொடர்ந்து பெண் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக கூறப்படுகின்றது.