NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

4 முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்களுக்காக 461 கோடி ருபாவுக்கும் அதிக செலவு – பிரதமர்..!

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிடப்பட்ட நிதி தொடர்பில் பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய வெளிக்கொணர்ந்தார்.

பாராளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்கு 3572 மில்லியன் ரூபாவும், 2015 ஆம் ஆண்டு முதல்; 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு 384 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

2020 முதல் 2022 வரையிலான இரண்டு வருட காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 1,262 மில்லியன் ரூபாவும், 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 533 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு 2024 ஆம் ஆண்டு முதல் 2025 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் 1.8 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, நாங்களும் வேலை செய்கிறோம், வெளிநாடுகளுக்கும் பயணம் செய்துள்ளதுடன், மக்களுக்காக உழைத்துள்ளோம் எனவும் மக்களின் பணத்தை முகாமைத்துவம் செய்வதை சொற்களில் மாத்திரமல்லாது செயலிலும் காண்பித்துள்ளோம் எனவும் பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணச்செலவுகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் நம்பத்தகாதவை என பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஜனாதிபதி வெறும் 1.8 மில்லியன் ரூபா என்ற இவ்வளவு குறைந்த தொகையில் மூன்று நாடுகளுக்கு அவர் எப்படி பயணம் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை எனவும் அவர் கால் பலகையில் அதாவது புட் போட் பயணம் செய்தாரா எனவும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர கேள்வி எழுப்பியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles