NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

4780 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்குமாறு பிரதமர் பணிப்புரை!

இதுவரை நியமனம் வழங்கப்படாதுள்ள பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நியமனங்களை வழங்குமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் செயற்பாடுகள் மற்றும் நியமனத்தை விரைவுபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், அரசாங்க ஆட்சேர்ப்பு செயல்முறையை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உத்தியோகபூர்வ குழுவினால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

தற்போது அரச சேவையில் உள்ள ஆரம்ப சேவை வெற்றிடங்களுக்கு பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களை நியமிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ள போதிலும் சில அமைச்சுக்களில் இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை. 

இதன்காரணமாக 4780 பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு இன்னும் நியமனம் வழங்க முடியாதுள்ளமை குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன்படி, இதுவரையில் நியமனம் வழங்கப்படாத பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் வழங்கி, உரிய நிறுவனங்களுக்கு அவர்களை நியமிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களான ஜானக்க வக்கும்புர, அசோக பிரியந்த, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles