(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொள்முதல் செயன்முறைக்கு அப்பால் சென்று, இலங்கை பொலிஸாருக்கு தேவையான 75,000 தொப்பிகளைக் கொள்வனவு செய்ததால், பொலிஸ் திணைக்களத்துக்கு 12 கோடி ரூபாய்க்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு 75,000 தொப்பிகளை கொள்வனவு செய்தபோதே இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசியக் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு தேவையான 75,000 தொப்பிகளைக் கொள்வனவு செய்யும் செயன்முறை 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு 75,000 தொப்பிகளைக் கொள்வனவு செய்வதற்கு 9 கோடியே 34 இலட்சம் (93,455,119) ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த தொப்பிகளைக் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட காலத்தாமதம் உள்ளிட்டக் காரணங்களால், 75,000 தொப்பிகளைக் களஞ்சியப்படுத்துவதற்கான கட்டணம், சட்ட ஆலோசனைக்கானக் கட்டணம், டொலருக்கான நிகரான ரூபாயின் பெறுமதி குறைந்தமைக்கான நட்டம் என்பவற்றை இலங்கைப் பொலிஸார் தமக்கு செலுத்த வேண்டுமென விநியோகஸ்தர்கள் கோரியிருக்கிறார்கள்.
எனவே, உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாதக் காரணங்களால் 2017ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி எடுக்கப்பட்டத் தீர்மானத்தின்படி, 75,000 தொப்பிகளுக்கான செலவுகள் மற்றும் ஏனைய செலவுகளை பொலிஸார் விநியோகஸ்தர்களுக்கு வழங்க மறுத்துள்ளனர்.
இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையையும் பொலிஸார் சென்றிருக்கிறார்கள்.
2011ஆம் ஆண்டு 75,000 தொப்பிகளைக் கொள்வனவு செய்ய 9 கோடியே 35 இலட்சத்து 55 ஆயிரத்து 119 ரூபாயே செலவாக மதிப்பிப்பட்டிருக்கிறது. இப்போது, 21 கோடியே 93 இலட்சத்து 57 ஆயிரத்து 715 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை இலங்கைப் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 12 கோடிக்கும் அதிகமான (125,902,596 ரூபாய்) நட்டம் ஏற்பட்டுள்ளது.
கொள்வனவு செயன்முறையின்போது உரிய நடைமுறைப் பின்பற்றபடாமை, நீண்ட காலம் சென்றதற்குப் பின்னர் இணக்கப்பாட்டுக்கு வந்தமை உள்ளிட்டவற்றுக்குப் பொறுப்புக்கூற வேண்டியது யார் என பொலிஸார் இன்னும் கண்டறியவில்லை எனவும் தேசியக் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.