ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரின். 14 ஆவது லீக் போட்டியில் குரூப் சி-யில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இதில் நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக குர்பாஸ் 80 ஓட்டங்களையும், இப்ராஹிம் சாத்ரான் 44 ஓட்டங்களையும் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் போல்ட், மேத் ஹென்றி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
160 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து திணறியது. 15.2 ஓவர்கள் நிறைவில் அந்த அணி 10 விக்கெட்களையும் இழந்து 75 ஓட்டங்களையும் மட்டுமே எடுத்து, 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சிறப்பாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களில் ரஷித் கான் மற்றும் ஃபசல்ஹக் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். நவீன் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தவில்லை என்றாலும், 3 ஓவர்களை வீசி 10 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 80 ஓட்டங்களை விளாசிய குர்பாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.