ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிறுவனம் ட்விட்டரில் மன்னிப்பு கோரியுள்ளது.
அப்பதிவில், “ பழம்பெருமை வாய்ந்த சென்னைக்கும், ஏ.ஆா். ரஹ்மான் சாருக்கும் நன்றி.
நம்பமுடியாத அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அபரிமிதமான கூட்டம் எங்கள் நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்திருக்கிறது.
கூட்ட நெரிசலால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் எங்களை மன்னிக்கவும். அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இசைக்கச்சேரி நடத்துமாறு ரசிகர்கள் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கோரிக்கை விடுத்திருந்ததால் கடந்த ஒகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி இசைக்கச்சேரியை நடத்தத் திட்டமிட்டு இருந்தார்.
எனினும், மழை காரணமாக அன்று இசை நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனது.
இதனையடுத்து ”மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் அந்த இசைக்கச்சேரி நேற்று சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்றது.
இசைக்கச்சேரியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
5 ஆயிரம், 10 ஆயிரம் என பணம் கொடுத்து பாஸ் வாங்கியவர்களுக்கு உட்கார கூட இடம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இதனால் மக்கள் பலர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக சமூகவலைதளங்களில் பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிறுவனம் ட்விட்டரில் மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.