உலகளவில் அதிகம் மக்களால் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு OS பற்றி கூறவே வேண்டாம், அந்த அளவுக்கு பிரபலம். பயன்படுத்தவும் மிகவும் எளிமையாக இருக்கும் என்பதால், ஆப்பிள் தவிர்த்து பெரும்பாலான அனைத்து மொபைல்களிலும் ஆண்ட்ராய்டு os தான் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு ஓப்பன்-சோர்ஸ் பிளாட்ஃபார்ம் என்பதால், ஸாஃப்ட்வேர் டிசைனர்கள், தங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கலாம். அந்த வகையில் பல இயங்குதளங்களை ஆண்ட்ராய்டில் இயக்க அவர்கள் முயற்சி செய்து வந்துள்ளனர். அதில் தற்போது புதிய முன்னேற்றம் கண்டுள்ளனர். கிட்டத்தட்ட முழு வடிவிலான விண்டோஸ் பிளாட்ஃபார்மை இப்போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்த முடியும். இது சாதாரண விஷயம் இல்லை என்றாலும் வின்லேட்டர் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதனை சாத்தியமாக்கலாம்.
கூகிளின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் விண்டோஸை நாம் பயன்படுத்த முடியும் என்பதால், இது பிற பெரிய கணினிகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. இதில், வின்லேட்டர் பயன்படுத்த மிகவும் எளிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. APK ஃபைல்களை நிறுவுவது போல் இதை இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிதாகும். இன்ஸ்டால் செட்டிங்குகளில் இருந்து பெரிய அனுமதிகள் எதுவும் தேவைப்படாது என மென்பொருள் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்வது மிகவும் சுலபம். முதலில் நாம் அதை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலிருந்து டவுன்லோடு செய்ய வேண்டும். அடுத்ததாக, டவுன்லோடு செய்த ஃபைலை ஒரு குறிப்பிட்ட ஃபோல்டருக்கு நகர்த்தி இயக்க வேண்டும். இதற்கான படிப்படியான வழிமுறைகளைக் கீழே காணலாம்.
கிட்ஹப்பிலிருந்து (GitHub) Winlator APK, OBB கோப்புகளைப் டவுன்லோடு செய்யவும்.
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் APK ஃபைலை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அடுத்ததாக, அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். சில நொடிகளுக்கு அதன் செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கும். அது நிறைவடைந்தவுடன் செயலியை மூட வேண்டும்.
இப்போது ஃபைல் மேனேஜர் என்ற செயலியைத் திறந்து நீங்கள் டவுன்லோடு செய்த OBB ஃபைலை நகலெடுக்கவும் (Copy). Android/OBB என்ற ஃபைல் லொகேஷனிற்கு சென்று, நகலெடுக்கப்பட்ட ஃபைலை பேஸ்ட் செய்யவும்.
பின்னர் வின்லேட்டர் பயன்பாட்டை மீண்டும் திறந்து OBB இமேஜ் ஃபைலை நிறுவ அனுமதிக்கவும் என்று கிளிக் செய்ய வேண்டும்.
விண்டோஸ் கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்களை இயக்குவதற்கான ஒரு திரையைக் காண்பீர்கள். உங்களிடம் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் சிப்செட் இருந்தால் எல்லாவற்றையும் நீங்கள் அப்படியே டீஃபால்ட் செட்டிங்கிற்கே விட்டுவிடுங்கள்.
இதை தவிர்த்து மீடியாடெக்கின் மாலி ஜி.பீ.யூ இருந்தால் உங்களுக்கு ஏற்றபடி ஃபைல்களை மேனேஜ் செய்ய “Create Container” என்ற அம்சத்தினைப் பயன்படுத்தவும்.
அவ்வளவு தான்! தற்போது உங்கள் சிறிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் விண்டோஸ் OS-ஐ இயக்கலாம். இந்த செயலி சோதனையில் இருப்பதால், சில நேரங்களில் கிராஷ் ஆவதற்கு வாய்ப்புள்ளதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.