மெல்போர்ன் : ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அம்பயரை காணவில்லை என்பதால் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருடத்தின் இறுதியில் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடந்தது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 318 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 264 ரன்கள் சேர்த்தது. மூன்றாம் நாள் அன்று ஆஸ்திரேலிய அணி தன் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடியது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை முடிந்து பாகிஸ்தான் வீரர்கள் களத்துக்கு வந்தனர். ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், மார்னஸ் லாபுஷேன் களத்துக்கு வந்தனர். களத்தில் இருக்கும் அம்பயர்கள் இருவரும் வந்தனர். ஆனாலும், போட்டி துவங்கவில்லை. அதன் பின்னரே டிவி அம்பயர் என அழைக்கப்படும், மூன்றாவது அம்பயர் ரிச்சர்ட் இல்லிங்க்ஸ்வொர்த் லிஃப்டில் சிக்கிக் கொண்டார் என்ற தகவல் வெளியானது. அதனால், களத்தில் இருந்த அம்பயர்கள், அந்த தகவலை வீரர்களுக்கு கூறினர். அவர் லிஃப்டில் இருந்து மீட்கப்படும் வரை போட்டி நடைபெறாது என கூறப்பட்டதால் பதற்றம் ஆனது.
சில நிமிடங்கள் கழிந்த நிலையில், நான்காவது அம்பயர், மூன்றாவது அம்பயரின் பணியை செய்வார் என அறிவிக்கப்பட்டு போட்டி துவங்கியது. இரண்டு பந்துகள் வீசப்பட்ட நிலையில், ரிச்சர்ட் இல்லிங்க்ஸ்வொர்த் மூன்றாவது அம்பயர் அறைக்கு வந்து தன் பணியை தொடர்ந்தார். அதன் பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர். கிரிக்கெட் வரலாற்றில் இப்படி அம்பயர் லிஃப்டில் சிக்கிய சம்பவம் நடந்ததில்லை என வர்ணனையாளர்கள் இதை வேடிக்கையாக கூறினர்.