இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷ பதிரண பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரின் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவந்த மதீஷ பதிரண தற்போது இலங்கை தேசிய அணிக்காக விளையாடி வருகின்றார். ஆசியக் கிண்ணத்தில் விளையாடி வரும் இவர், உலகக் கிண்ண குழாத்திலும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் தற்போது ராங்பூர் ரைடர்ஸ் அணி இவரை இணைத்துள்ளது. இவர் இலங்கை அணியின் மற்றுமொரு முன்னணி வீரரான வனிந்து ஹஸரங்கவுடன் ராங்பூர் ரைடர்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
ராங்பூர் ரைடர்ஸ் அணியின் தலைவராக பங்களாதேஷ் அணியின் தலைவர் சகீப் அல் ஹஸன் செயற்படவுள்ளதுடன், பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி துடுப்பாட்ட வீரர் நிக்கோலஸ் பூரன் ஆகிய வீரர்கள் இந்த அணியில் விளையாடவுள்ளனர்.
பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.