ஸிம்பாப்வேயில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள 10 நாடுகளுக்கு இடையிலான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு 15 வீரர்கள் அடங்கிய இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் தகுதிகாண் சுற்றை முன்னிட்டு இலங்கை அணியைப் பலப்படுத்தும் பொருட்டு சிரேஷ்ட வீரர்களான திமுத் கருணாரட்ன, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட்டிருந்ததனர்.
தகுதிகாண் சுற்று
இரண்டு குழுக்களில் 10 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாவுள்ளது.
அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுடன் பி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.
இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 19ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.
தொடர்ந்து ஒமானை 23ஆம் திகதியும், அயர்லாந்தை 25ஆம் திகதியும் ஸ்கொட்லாந்தை 27ஆம் திகதியும் இலங்கை எதிர்த்தாடும்.
ஏ குழுவில் முதலாவது உலக சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம். ஐக்கிய அமெரிக்கா ஆகியன இடம்பெறுகின்றன.
இந்த இரண்டு குழுக்களிலும் லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 6 சுற்றில் விளையாடும். ஒரு குழுவிலுள்ள அணிகள் மற்றைய குழுவிலுள்ள அணிகளையே சுப்பர் 6 சுற்றில் எதிர்த்தாடும். சுப்பர் 6 சுற்று முடிவில் அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண பிரதான சுற்றில் விளையாட தகுதிபெறும்.
இலங்கை குழாம்
தசுன் ஷானக்க (தலைவர்), குசல் மெண்டிஸ் (உதவி அணித் தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, சதிர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, துஷான் ஹேமன்த, சாமிக்க கருணாரட்ன, துஷ்மன்த சமீர, மதீஷ பத்திரண, லஹிரு குமார, கசுன் ராஜித்த.