கிரேக்க நாட்டில் காட்டு தீ பரவி வரும் நிலையில், விமானம் மூலம் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு துறையினர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
கிரேக்கின் எவியா தீவில் உள்ள கரிஸ்டோஸ் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு தீ பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு பரவி வரும் தீ பக்கத்து தீவில் உள்ளவர்களுக்கு கடுமையான சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளமையினால் இதனை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது வரை தீவின் 10% நிலப்பரப்பு தீயால் முழுவதுமாக எரிக்கப்பட்டுள்ளதோடு காற்று பலமாக வீசி வருவதால் தீ மேலும் தீவிரமாக பரவி வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், விமானம் மூலம் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு தற்போது வரை இந்த தீவின் மலை பகுதியிலிருந்து சுமார் 60 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.