NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாக்னர் குழு பயங்கரவாதக் குழுவாக அறிவிப்பு : குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 14 ஆண்டு சிறை !

ரஷ்யாவின் தனியாா் இராணுவப் படையான வாக்னா் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க பிரிட்டன் தீர்மானித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்;

வாக்னா் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கான வரைவு ஆணை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆணை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமுல்படுத்தப்பட்டால், வாக்னா் குழுவில் இணைவதோ, அந்தப் படைக்கு ஆதரவாக செயல்படுவதோ பிரிட்டனில் சட்டவிரோதமாகிவிடும்.

அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

பிரிட்டனில் இருக்கக் கூடிய வாக்னா் படையினரின் சொத்துக்களை முடக்கவும் அந்த வரைவு ஆணையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் உள்துறை அமைச்சா் சூயெல்லா பிரேவா்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாக்னா் படை என்னும் அழிவு சக்தி ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதினின் இராணுவ உபகரணமாகப் பயன்படுத்தப்படுகிறது.

தன்னால் உருவாக்கப்பட்ட அந்த அசுர சக்தி குறித்து ரஷ்யா எந்த முடிவை எடுத்திருந்தாலும், புதினின் அரசியல் இலாபங்களுக்காக உலகின் பல்வேறு பகுதிகளில் வாக்னா் படை நிலைத்தன்மையைக் குலைத்து வருகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், வாக்னா் படையினா் அனைவரும் பயங்கரவாதிகள்’ என்றாா் அவா்.

ரஷ்யாவின் தனியாா் இராணுவப் படையான வாக்னா் குழு, அந்த நாட்டுக்காக ஆப்பிரிக்கா, சிரியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் போரிட்டு வந்தது. ‘ஜனாதிபதி புதினின் துணை ராணுவப் படை’ என்று வா்ணிக்கப்பட்ட அது, தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ரஷ்ய இராணுவத்துக்காக கைப்பற்றிக் கொடுத்தது.

எனினும், இந்தப் போரின்போது இராணுவ தலைமைக்கும், வாக்னா் குழு தலைவா் ப்ரிகோஷினுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில், இராணுவ தலைமைக்கு எதிராக வாக்னா் படை கடந்த ஜூன் 23 ஆம் திகதி ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டது. இது, ஜனாதிபதி விளாதிமீா் புதினின் தலைமைக்கு மிகப் பெரிய சவாலாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளே ஆயுதக் கிளா்ச்சியைக் கைவிடுவதாக ப்ரிகோஷின் அறிவித்தாா். புதினும் ப்ரிகோஷின் மற்றும் கிளா்ச்சிப் படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாகக் கூறப்பட்டது.

இந்தச் சூழலில், வாக்னா் குழு ஆயுதக் கிளா்ச்சி நடத்தி சரியாக 2 மாதங்கள் நிறைவடைந்த கடந்த மாதம் 23 ஆம் திகதி, மாஸ்கோவிலிருந்து யெவ்கெனி ப்ரிகோஷின் உள்ளிட்ட 10 வாக்னா் குழுவினருடன் புறப்பட்ட தனியாா் விமானம் விழுந்து நொறுங்கி, அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா்.

இந்த விபத்துக்கு ரஷ்ய அரசுதான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இருந்தாலும், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் உக்ரைனின் நடவடிக்கைகள் தொடா்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், பிரிட்டன் இந்த முடிவை எடுத்துள்ளது.

Share:

Related Articles