NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பலஸ்தீனியர்களை 24 மணி நேரத்திற்குள் தெற்கு நோக்கி நகர இஸ்ரேல் வலியுறுத்து!

வடக்கு காசாவில் உள்ள 1.1 மில்லியன் பலஸ்தீனியர்களும் 24 மணி நேரத்திற்குள் தெற்கு நோக்கி நகர வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஹமாஸ் போராளிகளை அழிக்கும் வகையில் காசா மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. 

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஏற்கெனவே காசா உருக்குலைந்த நிலையில், தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தொடங்கினால், இதுவரை இல்லாத பேரழிவை காசா சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் திகதி காசா முனையிலிருந்து ஆயிரக்கணக்கான ரொக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். மேலும், பாராகிளைடர்கள் மூலம் வான்வழியாகவும், கடல் வழியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். 150-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாகவும் ஹமாஸ் போராளிகள் பிடித்துச் சென்றனர்.

இதற்குப் பதிலடியாக காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் எல்லையிலும் இராணுவ வீரர்களைக் குவித்துள்ளது. இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் போராளிகளுடன் சண்டையும் நீடித்து வருகிறது. இந்தத் திடீர் போரில் இரு தரப்பிலும் சுமார் 4,200 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் போராளிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் கூறினாலும், காசாவில் குடியிருப்புகளும், வழிபாட்டுத் தலங்களும் இஸ்ரேலின் குண்டுமழையால் தரைமட்டமாகி வருகின்றன.

இந்நிலையில், காசா மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது.

இது குறித்து இஸ்ரேல் இராணுவ ஊடகப் பேச்சாளர் ரிச்சாட் ஹெக்ட் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவிக்கையில்,

ஹமாஸ் போராளிகளை அழிக்கும் வகையில் தரைவழித் தாக்குதலுக்கு இராணுவம் தயாராகி வருகிறது.

அரசு உத்தரவிட்டால் தாக்குதல் தொடங்கப்படும். இப்போதைக்கு ஹமாஸ் தலைவர்கள் மீது குறிவைத்து வருகிறோம் என்றார். 40 கிலோமீற்றர் நீளம் கொண்ட குறுகிய நிலப்பரப்பான காசாவில் 23 இலட்சம் பேர் வசித்து வருகின்றனர். அங்கு இஸ்ரேல் இராணுவம் தரைவழித் தாக்குதலை நடத்தினால் உயிரிழப்பு மிகவும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

காசாவின் ஒரே மின் நிலையமும் எரிபொருள் தீர்ந்ததால் புதன்கிழமை மூடப்பட்டதால் காசா பகுதி இருளில் மூழ்கியுள்ளது. தனியார் ஜெனரேட்டர்கள் மூலம் சில இடங்களில் மட்டுமே மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மின்சார வசதியின்றி மக்கள் தவித்து வரும் நிலையில், நேற்று பேக்கரிகளிலும், மளிகைக் கடைகளிலும் பொருள்களை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், காசாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், புதிதாகப் பிறந்த குழந்தைகளை இன்குபேட்டரில் வைப்பதிலும், வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் செலுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்வதும், எக்ஸ்ரே எடுப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

‘ஹமாஸ் போராளிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படும் வரை காசாவுக்குள் எதுவும் அனுமதிக்கப்படாது. மின்சார இணைப்பும் வழங்கப்படாது’ என தெரிவித்தார்.

காசா மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இதற்கிடையே, மேற்குக் கரையில் ஓர் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது இஸ்ரேலிய குடியிருப்பாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலஸ்தீனர்கள் இருவர் உயிரிழந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரை 1,000 வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாகவும், 560 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

காசாவில் குடிநீர் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளதால் சுமார் 6.50 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கழிவுநீர் அமைப்புகள் செயலிழந்து தெருக்களுக்குள் கழிவுநீர் புகுந்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 1,350 பேர் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் இஸ்ரேலில் 222 இராணுவ வீரர்கள் உள்பட 1,300 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலுக்குள் ஊடுருவிய 1,500 ஹமாஸ் போராளிகளின் கொல்லப்பட்டதாகவும், காசாவில் கொல்லப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானோர் ஹமாஸ் போராளிகள் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிலிருந்து இந்தியர்களை மீட்கும் ‘ஒபரேஷன் அஜய்’ திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 230 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் இன்று புறப்படுகிறது.

இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை மீட்பதற்காக ‘ஒபரேஷன் அஜய்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை அறிவித்தார். அதன்படி, இஸ்ரேல்வாழ் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதல் விமானம், இஸ்ரேலின் பென் குரியோன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்படுகிறது.

இந்த விமானத்தில் சுமார் 230 இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர். இந்தப் பயணத்துக்கான செலவை மத்திய அரசு ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களைத் தொடர்பு கொள்வதற்கான விரிவான முயற்சிகளை டெல் அவிவில் உள்ள இந்தியத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது. இந்திய அமைப்புகளுடன் இணையவழி சந்திப்புகள் நடத்தப்படுகின்றன. 

இந்தியா திரும்புவதற்கான விமானத்தின் விவரங்கள் பற்றி இந்தியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது. இந்திய மாணவர்கள், செவிலியர்களைச் சந்தித்து தேவையான உதவிகளைத் தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Share:

Related Articles