NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IPL கிண்ணத்தை வெல்லப்போவது யார்?

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் பிளே-ஓப் சுற்றுக்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2 முறை சாம்பியனான (2012, 2014) கொல்கத்தா அணி தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. லீக் சுற்றில் 9 வெற்றியுடன் முதலிடம் பிடித்த கொல்கத்தா அணி முதலாவது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஐதராபாத் அணி அதிரடியில் அசத்தி வருகிறது. நடப்பு சீசனில் இதுவரை 3 முறை 260 ஓட்டங்களுக்கு மேல் குவித்து வியக்க வைத்தது. ஐதராபாத் அணியில் துடுப்பாட்டத்தில் டிராவிஸ் ஹெட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 567 ஓட்டங்கள்), அபிஷேக் ஷர்மா (3 அரைசதத்துடன் 482), ஹென்ரிச் கிளாசென் (4 அரைசதத்துடன் 463) ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகிறார்கள். அவர்கள் நிலைத்து நின்று ஆடினால் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்குவார்கள்.

நடப்பு தொடரில் லீக் (4 ஓட்டங்கள்), முதலாவது தகுதி சுற்று (8 விக்கெட்) என்று இரண்டு முறை ஐதராபாத்தை வீழ்த்தி இருக்கும் கொல்கத்தா அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அத்துடன் 3-வது முறையாக கிண்ணத்தை கையில் ஏந்த முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் ஐதராபாத் அணி முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுப்பதுடன் 2-வது முறையாக கிண்ணத்தை வசப்படுத்த கடுமையாக போராடும். வலுவான இரு அணிகளும் மோதும் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனலாம்.

மழையால் பாதிக்க வாய்ப்பா?

சென்னையில் நேற்று மாலை பெய்த மழை காரணமாக கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இன்று வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கனமழை இருக்காது என்பதால் இறுதிப்போட்டிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

இந்த போட்டிக்கான பரிசுத் தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், கடந்த ஆண்டை போலவே கிண்ணத்தை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும் ( இந்திய ரூபா), 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.13 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிகிறது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles