ஐ.பி.எல். மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற இருக்கிறது.
மெகா ஏலத்துக்காக முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான விதிமுறைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஒரு அணி அதிகபட்சமாக தங்களது அணியில் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும்.
இதன் காரணமாக 31 -ந் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடும். அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை தயார்படுத்தி வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் யார்-யார்? தக்க வைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
இந்தநிலையில், ஓய்வு முடிவை அறிவிக்க தயாராகியுள்ள டோனி 2025 ஐ.பி.எல். தொடரில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். அவர் ஆடுவது குறித்து எந்த தகவல் அளிக்காத நிலையில் வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் டோனியை சந்தித்து பேச சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே சி.எஸ்.கே. அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், பதிரானா ஆகிய வரிசைகளில் 3 வீரர்களை தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், டோனியை உள்ளூர் வீரராக தக்க வைத்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம், டோனி 2025 ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
சி.எஸ்.கே. தலைமை நிர்வாகி அதிகாரி கே.எஸ். விஸ்வநாதனும் இதை உறுதி செய்தார். அவர் கூறும் போது ‘டோனி விளையாட தயாராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
இது குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.