NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IPL போட்டிகளில் புதிய விதிமுறை..1

இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் நாணய சுழற்சிக்குப் பிறகு விளையாடும் இறுதிப் பதினொருவர் அணியை தேர்வு செய்து கொள்ளும் புதிய விதிமுறையை IPL நிர்வாகம் அறிமுகப்படுத்துகிறது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் IPL T20 லீக் தொடர் இம்மாதம் 31ஆம் திகதி முதல் மே 28ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளன.

எனவே, இந்த ஆண்டுக்கான IPL தொடர் ஆரம்பமாக இன்னும் எட்டு நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது கடைசி கட்டத்தில் உள்ளன. அனைத்து அணிகளும் தமது வீரர்களை ஒன்றிணைத்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, நடப்பாண்டு IPL தொடரின் விதிகளில் ஒருசில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த ஆண்டு IPL தொடர் முதல் Impact Player எனப்படும் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்று வீரரை அறிமுகப்படுத்தும் முறையை பிசிசிஐ மற்றும் IPL நிர்வாகம் கொண்டு வந்திருக்கிறது.

இந்த புதிய விதிகளின்படி ஆடும் 11 வீரர்களோடு மாற்று வீரராக ஒரு பந்துவீச்சாளரையோ அல்லது துடுப்பாட்ட வீரர் அல்லது ஒரு சகலதுறை வீரரையோ ஒரு அணியால் தேர்வு செய்ய முடியும். இந்த மாற்று வீரர் அணியில் இடம் பெற்றிருக்கும் 11 வீரர்களில் ஒருவருக்குப் பதிலாக களமிறங்கலாம்.

இதனைத் தொடர்ந்து IPL தொடரின் விதிமுறைகளில் மேலும் ஒரு புதிய மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, ஒரு அணியானது விளையாடப் போகும் பதினொரு வீரர்கள் மற்றும் மாற்று வீரர் ஆகியோரை நாணய சுழற்சிக்குப் பிறகு அறிவிக்கலாம். இதற்கு முன்பு போட்டி விதிகளின்படி ஒரு அணி நாணய சுழற்சிக்கு முன்பாக ஆடக்கூடிய 11 வீரர்களை அறிவித்திருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டிலும் இதுதான் விதியாக இருக்கிறது.

ஆனால், இந்த ஆண்டு IPL தொடர் முதல் புதிய விதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அந்த விதிமுறைகளின் படி நாணய சுழற்சிக்குப் பின்பே வீரர்களை அறிவித்துக் கொள்ளலாம். அணியில் இடம்பெறக்கூடிய 11 வீரர்களையும் மாற்று வீரரையும் நாணய சுழற்சிக்குப் பின்பு அறிவிக்கலாம். அணித் தலைவர்கள் தங்களுக்குத் தேவையான வீரரை தேர்வு செய்யவும் இந்த விதி உதவும் எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய விதியின் மூலம் போட்டியில் நிறைய தாக்கங்கள் ஏற்படலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதற்கு முன்பு பொதுவாக கிரிக்கெட்டில் நாணய சுழற்சி போடப்படுவதற்கு முன்பே விளையாடும் இறுதி பதினொரு வீரர்கள் பட்டியலை போட்டி மத்தியஸ்தரிடம் கொடுத்து விட வேண்டும். ஆனால் தற்பொழுது IPL தொடரில் இந்த விதி மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விதி முதல் முறையாக இந்த ஆண்டு முற்பகுதியில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற SA T20 லீக்கில் அறிமுகப்படுத்தப்பட்டமை நினைவுகூறத் தக்கது.

எவ்வாறாயினும், இந்த IPL தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படும் இந்த புதிய விதி குறித்து இந்திய கிரிக்கெட் சபை இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles