2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மகுடத்தை சூடியது.
114 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதன்படி, கொல்கத்தா அணி எட்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஐபிஎல் மகுடத்தை சூடிக்கொண்டது.
போட்டியின் ஆரம்பம் முதலே தனது ஆதிக்கத்தை செலுத்திய கொல்கத்தா அணியில் வீரர்கள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 113 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தினர்.
சென்னை சேப்பாக் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஓட்டக் குவிப்பில் பெரும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கொல்கத்தா அணி வீரர்களின் வேகம் மற்று சுழல் பந்துவீச்சில் சிக்கி தடுமாறியிருந்தனர்.
அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பெரும் தடுமாற்றத்தை கண்டதுடன், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களும் ஓட்டக் குவிப்பில் தடுமாறியிருந்தனர்.
18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களை மட்டுமே குவித்திருந்தனர்.
அணித் தலைவர் பட் கம்மின்ஸ் மட்டுமே ஓரளவு நிதானமாக துடுப்பெடுத்தாடி 24 ஓட்டங்களை குவித்திருந்தார்.
ஏழு வீரர்கள் ஒன்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்திருந்தனர்.
பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் மூன்று விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர்.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் வெங்கடேஷ் ஐயர் 52 ஓட்டங்களையும், ரஹ்மானுல்லா குர்பாஸ் 39 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.
இதேவேளை, கொல்கத்தா அணி தனது முதல் ஐபிஎல் மகுடத்தை 2012 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக் மைதானத்தில் வெற்றிகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.