லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் ஹசரங்க தலைமையிலான கண்டி பால்கன்ஸ் அணியும், திசாரா பெராரே தலைமையிலான கொலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் விளையாடின.
இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய கொலம்போ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது.
கொலம்போ தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 70 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கண்டி அணி களம் புகுந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சந்திமல் மற்றும் பிளெச்சர் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சந்திமல் 12 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து பிளெச்சர் உடன் முகமது ஹாரிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ஹாரிஸ் அரைசதம் அடித்த நிலையில் 56 ரன்னிலும், பிளெச்சர் 47 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய காமிந்து மெண்டிஸ் 16 பந்தில் 33 ரன், ஷனகா 0 ரன், ஹசரங்கா 0 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
ஒருபுறம் அதிரடி காட்டிய மேத்யூஸ் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினார். கண்டி அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 20 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை பெரேரா வீசினார். அந்த ஓவரின் முதல் 5 பந்துகளில் 1 விக்கெட் மற்றும் 17 ரன் வந்தது. இதையடுத்து அந்த அணியின் வெற்றிக்கு இறுதி பந்தில் 3 ரன் தேவைப்பட்டது.
இறுதி பந்தை எதிர்கொண்ட மேத்யூஸ் ரன் அவுட் ஆன காரணத்தினால் பரபரப்பான ஆட்டத்தில் கண்டி அணியை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் திரில் வெற்றி பெற்றது.
இறுதியில் கண்டி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்தது. கண்டி தரப்பில் அதிகபட்சமாக முகமது ஹாரிஸ் 56 ரன்கள் எடுத்தார். கொலம்போ தரப்பில் மதிஷ பத்திரன 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.