பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகள் தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடளிக்க, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு நேரடி தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, 118 என்ற இலக்கத்தின் மூலம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் செயற்படுத்தப்படும் அவசர தொலைபேசிப் பிரிவுக்கு அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நாட்டிற்குள் நடைபெறும் பல்வேறு குற்றச் செயல்கள், போதைப் பொருள் கடத்தல்கள் மற்றும் விற்பனை தொடர்பில் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டிய தகவல்களையும் இந்த இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தியோ அல்லது வெளிப்படுத்தாமலோ தகவல்களை வழங்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 118 என்ற நேரடி தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் செயற்பாட்டில் இருக்கும் என்பதுடன், அந்த இலக்கத்துக்கு வழங்கப்படும் தகவல்களின் இரகசியம் பேணப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.