NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் ஹொலம்புவ பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், களனி கங்கையின் நீர்மட்டமானது கிளென்கோர்ஸ், கித்துல்கல, தெரணியகல மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் அதிகரித்துள்ளது. அதேநேரம், நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் தல்கஹகொட பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மகாவலி கங்கையின் நீர்மட்டம் நாவலப்பிட்டி மற்றும் பேராதெனிய ஆகிய பகுதிகளில் அதிகரித்து வருவதுடன், மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் மனம்பிட்டிய பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

யான் ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் ஹொரவப்பொத்தானை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், மா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், யக்காவெள பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தெதுறு ஓயாவின் நீர்மட்டம் மொரகஸ்வெள பகுதியிலும், மஹா ஓயாவின் நீர்மட்டம் படல்கம பகுதியிலும், தந்திரிமலை பகுதியில் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தெதுரு ஓயா, இராஜாங்கனை, கவுடுல்ல, யான் மற்றும் பராக்கிரம சமுத்திரம் ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் திறப்பு வீதம் அதிகரிக்ககூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், பல பகுதிகளில் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மேலும் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மல்வத்து ஓயாவை சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.

அதற்கமைய, மஹாவிலச்சி, வெங்கலச்செட்டிக்குளம், நானாட்டான், முசலி மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்களும், அவ்வழியாகச் செல்லும் பயணிகளும் இதுதொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles