உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திகதியை அறிவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (07) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.
இன்று முற்பகல் 10.30 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த கலந்துரையாடலில், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம், தேர்தலுக்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளன.
தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, அதை எப்படி நடத்துவது என்பது குறித்து நிதியமைச்சின் செயலாளர், அரச செய்தியாளர் அலுவலகம் மற்றும் பிற தரப்பினருக்கு அறிவிக்கப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்றைய தினம் எதிர்க்கட்சிகளில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளும் இன்று தேர்தல் ஆணைக்குழுவினரை சந்திக்கவுள்ளன.
முன்னதாக, தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக அனுப்பிய கடிதத்தில், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துமாறு கோரியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.