தற்போது பயன்பாட்டில் இருக்கும் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
எனினும், புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து அமுல்படுத்தவும் அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்தோடு, நட்புறவான சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் கடந்துவிட்டுள்ள நிலையில், மேலும் தரவுகளை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பத்தின்படி, தற்போது உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான நடைமுறையை அரசாங்கம் அங்கீகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கருத்திற்கொண்டு, இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, பரேட் சட்டத்தின் இடைநிறுத்தத்தை நீட்டிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பரேட் சட்டத்தை அமல்படுத்துவது எதிர்வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.