எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக வன்னி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமது வேட்புமனுவை நிராகரிப்பதற்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கும் எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஜனநாயக தேசிய கூட்டணி தாக்கல் செய்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன்படி. உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனையைப் பெற்று விடயங்களை முன்வைப்பதற்கான தேவை உள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள திகதியிட்டுள்ளது.
இதேவேளை, கட்சியின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியான பரராஜசிங்கம் உதயராசா மற்றும் 2 வேட்பாளர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.