உத்தேச உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஊடாக தமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம் எனவும், கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளுக்காக விசேட குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கட்சியை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், மறுசீரமைப்புகளுக்காக விசேட குழு ஒன்றை நியமித்துள்ளோம் எனவும் நாடளாவிய ரீதியில் தொகுதி அமைப்பாளர் கூட்டங்களை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளையும் எதிர்க்கும் எதிர்க்கட்சியாக செயற்படப் போவதில்லை என்றும் நாட்டு மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் நடாத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் உத்தேச உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஊடாக தமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வெற்றியோடு தமது ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டதாகவும், 2029ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக தாம் மீண்டும் எழுச்சி பெறுவோம் எனவும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.