தமது பிரச்சினைகளுக்கு இன்று உரிய தீர்வு கிடைக்காவிட்டால் நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அண்மையில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
புகையிரத திணைக்களம் குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதாகக் கூறுகின்ற போதிலும், வேறு சில காரணங்களினால் காலம் தாழ்த்தப்படும் நிலை காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நிரந்தர தீர்வொன்றை புகையிரத பொது முகாமையாளரின் ஊடாக அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட வேண்டும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாளை முதல் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.