லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) 4வது பருவகாலத்தை உற்சாகமாக ஆரம்பிக்கும் வகையில் “மினி கூப்பர்” பேரணியொன்றை போட்டித்தொடரின் ஏற்பாட்டாளர்கள் நடத்தியுள்ளனர்.
இந்த மினி கூப்பர் பேரணியில் 40 இற்கும் அதிகமான பழமைவாய்ந்த மினி கூப்பர் கார்கள் மற்றும் மோக் கார்கள் இணைந்திருந்ததுடன், கொழும்பில் உள்ள வீதிகளில் LPL தொடர்பான எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு நினைவூட்டுவதாக அமைந்திருந்தது.
“குரூசிங் கொழும்பு : லங்கா பிரீமியர் லீக் பருவகாலம் 4 : மினி கூப்பர் ரேலி” என பெயர் சூட்டப்பட்டு நடைபெற்ற இந்த பேரணியானது LPL தொடரின் பணிப்பாளர் சமந்த தொடன்வெல மூலம் இலங்கை கிரிக்கெட் சபை தலைமையத்தில் ஆரம்பித்த இந்த பேரணியில், இலங்கையின் முன்னணி காரோட்டப்பந்தய வீரர் டிலாந்த மாலகமுவ மற்றும் மினி கூப்பர் கழகத்தின் தலைவர் நாமல் சில்வா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் சபை தலைமையத்தில் ஆரம்பித்த இந்த பேரணியானது சுதந்திர சதுக்கம், துன்முல்ல சந்தி, காலி வீதி, இலங்கை வங்கி வீதி, கொழும்பு 1, மற்றும் கொழும்பு 10 ஊடாக இறுதியாக கொழும்பு ஆர்.பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்தை வந்தடைந்தது.
குறித்த இந்த பேரணியில் கலந்துக்கொண்ட மினி கூப்பர் சாரதிகளுக்கு, LPL தொடருக்கான டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டதுடன், இந்த பேரணி LPL தொடருக்கான சிறந்த விளம்பரமாகவும் மாறியிருந்தது.
இந்த மினி கூப்பர் பேரணி சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு மறக்க முடியாத LPL 2023 இற்கான ஆரம்ப களத்தை அமைத்துள்ளது. அத்துடன் விளையாட்டுத்திறன், தோழமை மற்றும் சாகசத்தின் உணர்வைக் வெளிப்படுத்தியுள்ளது. LPL தொடர் இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் தொடரை எதிர்பார்த்துள்ளனர்.