விண்வெளி பயணங்கள் மற்றும் விண்வெளியில் ஏற்படும் சிக்கலான சவால்களை மனித உயிர்களின் சேதமின்றி செய்து முடிக்க, நாசா ஒரு புதிய அதிநவீன ஹியூமன்னாய்டு ரோபோட்களை (Humanoid Robot) உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஹியூமன்னாய்டு ரோபோட்டை நாசா (NASA) இப்போது வெற்றிகராக உருவாக்கிவிட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாசாவின் இந்த மனித உருவ விண்வெளி வீரர் ஹியூமன்னாய்டு ரோபோட் சோதனைக்காக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வால்கெய்ரி (Valkyrie) என அழைக்கப்படும், இந்த மனித உருவ ரோபோவை ஏஜென்சியின் ஆர்ட்டெமிஸ் (artemis) மற்றும் பிற விண்வெளிப் பயணங்களின் போது நாசா பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாசாவின் வால்கெய்ரி மனித உருவ ரோபோ, ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் சொந்த தளத்தில் இருந்து அவுஸ்திரேலியாவில் உள்ள வுட்சைட் எனர்ஜி (Woodside Energy) அவுஸ்திரேலிய நிலையத்திற்கு விரிவான சோதனைக்காக அனுப்பப்படுவதுடன் இங்கு இதன் முழு செயல்பாடும் சோதனை செய்யப்படும்.
இந்த ரோபோக்களை விண்வெளியில் களமிறக்குவதற்கு முன்பு எவ்வாறு சிறப்பாக இவை சவால்களை சமாளிக்கிறது என்றும், எப்படி திறன்பட இவை அதன் நுண்ணறிவைப் பெருக்கி செயல்படுகிறது என்பதையும் இந்த சோதனையில் நாசா கண்டறியவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.