(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 சதவீதமாக குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனால் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாடு டொலர் நெருக்கடியில் இருந்தபோது, QR குறியீடு அறிமுகப்படுத்தியதன் பயனாக, ஏனைய அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு டொலரை பயன்படுத்த முடிந்தது.
QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் 65 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் 50% எரிபொருள் இருப்பை பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனை பின்பற்றாத அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் மீண்டும் கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவரப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, இது தொடர்பில் 770 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 50 சதவீத எரிபொருள் இருப்பு வைத்திருக்கவில்லை எனில், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அவை கையகப்படுத்தப்படும் என்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இந்த நிரப்பு நிலையங்கள் வழங்கப்படும் போது கூட்டுத்தாபனத்தினால் முன்வைக்கப்படும் முக்கிய நிபந்தனைகளில் இதுவும் ஒன்றாகும்.