இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கேஎல் ராகுல் முழு உடல் தகுதி பெற்றுள்ளதாகவும், அவர் ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்ற ஆசியக் கிண்ணத் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளதுடன், பெரும்பாலான குழு நிலைப் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன.இந்த நிலையில், ஆசியக் கிண்ணத் தொடருக்காக பெயரிடப்பட்ட இந்திய குழாத்தில் கேஎல் ராகுல் இடம்பெற்றிருந்தாலும் காயம் காரணமாக முதல் 2 போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி எடுத்து வந்த அவர் தற்போது பூரண உடல் தகுதி பெற்றுள்ளார் என இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனால் ஆசியக் கிண்ணத் தொடரில் சுபர் 4 சுற்றில் ஆடுவதற்காக கேஎல் ராகுல் இலங்கை பயணிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதிப் பதினொருவர் அணியில் கேஎல் ராகுல் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேஎல் ராகுல் இந்திய அணியுடன் இணையும் பட்சத்தில் உடனடியாக இந்திய அணியில் மாற்றம் நடக்குமா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் நீக்கப்படுவாரா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக இஷான் கிஷன் சிறப்பான இன்னிங்ஸ் ஆடினார். 81 பந்துகளை எதிர்கொண்ட அவர், 2 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகள் அடங்களாக 82 ஓட்டங்களை எடுத்தார்.
மறுபுறத்தில் இந்திய அணியின் மத்திய வரிசையில் இடதுகை துடுப்பாட்ட வீரர் ஒருவர் இல்லாததால், இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.