NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Super 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி !

ஆசியக் கிண்ணத் தொடர் 2023 இனது முதலாவது சுபர் 4 போட்டியில் பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதோடு, சுப்பர் 4 சுற்றில் தமது முதல் வெற்றியினையும் பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஆசியக் கிண்ண சுபர் 4 சுற்று மோதல் நேற்று (06) லாஹூர் கடாபி மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களை எடுத்தது. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் சகீப் அல் ஹஸன் ஆகியோர் அரைச்சதங்கள் பெற்றனர்.

இதில் ரஹீம் தன்னுடைய 46ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 87 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்கள் பெற, சகீப் அல் ஹஸன் தன்னுடைய 54ஆவது அரைச்சதத்தோடு 7 பெளண்டரிகள் அடங்கலாக 53 பந்துகளில் 57 ஓட்டங்கள் பெற்றார். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ரவுப் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, நஸீம் சாஹ் 3 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 39.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது. பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் இமாம்-உல்-ஹக் அரைச்சதம் விளாசி 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இதேநேரம் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த மொஹமட் ரிஸ்வான் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்கள் பெற்றிருந்தார். பங்களாதேஷ் பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மட், சொரிபுல் இஸ்லாம் மற்றும் மெஹிதி ஹஸன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியும் அவர்களது பந்துவீச்சு பிரயோசமானமாக அமைந்திருக்கவில்லை. போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ரவுப் தெரிவாகினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles