NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை கால்பந்து வீரர்கள் நிபந்தனைகளுடன் விளையாட அனுமதி !

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கை கால்பந்து சம்மேளனம் மீது சர்வதேச கால்பந்து சம்மேளனம் தடை விதித்திருந்தது. இதனால் இலங்கை கால்பந்து அணி மற்றும் கால்பந்துடன் தொடர்புடைய தரப்பிற்கு சர்வதேச கால்பந்து போட்டிகளில் ஈடுபடுவதற்கு தடை பிரப்பிக்கப்பட்டிருந்தது. 

இதனால் இலங்கை தேசிய அணி மற்றும் இளையோர் கால்பந்து அணிகள் அண்மையில் நிறைவடைந்த சாப் சம்பியன்ஷிப் உள்ளிட்ட பல சர்வதேச தொடர்களில் விளையாடும் வாய்ப்பை இழந்தது. இதேவேளை, இந்த தடை நீடித்தால் இலங்கை அணிக்கு அடுத்த உலகக் கிண்ண தொடருக்கான தகுதிகாண் போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை எற்படும் சாத்தியம் இருந்தது.

இவ்வாறான ஒரு நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் இலங்கை கால்பந்து அணிக்கு FIFA மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) மூலம் கடுமையான நிபந்தனைகளின் கீழ் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

இலங்கை கால்பந்து அணியின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஒக்டோபர் மாதம் 12ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் இடம்பெற திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், இந்த தகுதிகாண் போட்டிகளுக்கு குறைந்தது 10 நாட்களுக்கு உள்ளேயேனும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாக சபைத் தேர்தல்களை நடாத்தி முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. 

அவ்வாறு குறிப்பிடப்பட்டவாறு இலங்கை கால்பந்து சம்மேளனம் குறித்த திகதிகளுக்கு முன்னதாக தேர்தல்களை நடாத்தி முடிக்காது போகும் சந்தர்ப்பத்தில் இலங்கை கால்பந்து அணிக்கு தகுதிகாண் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பம் இல்லாமல் போகும் என்பதோடு தடையும் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனக் குறிப்பிடப்படுகின்றது. 

இதேநேரம், இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு விளையாட்டு அமைச்சு வழங்கியிருக்கும் தற்காலிக பதிவு இரத்து தடையும் தற்போது அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles