ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பயண நேர அட்டவணையில் ஏற்படும் காலதாமதம் தொடர்பில் ஆராயும் வகையில் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் இன்று காலை 9.30 அளவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான போக்குவரத்து தாமதம் காரணமாக நாட்டின் தேசிய விமான சேவைக்கு களங்கம் ஏற்படுத்தப்படுவது குறித்தும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பல விமான போக்குவரத்து இரத்து செய்யப்பட்டதுடன், விமான பயண நேர அட்டவணையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இரு விமானங்கள் நேற்றைய தினம் திடீரென இரத்து செய்யப்பட்டன.
நேபாளம் மற்றும் மும்பை ஆகியவற்றுக்கு பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானங்களே இவ்வாறு இரத்து செய்யப்பட்டன.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னதாக கொரியாவுக்கு பயணிக்கவிருந்த விமானங்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு இரத்து செய்யப்பட்டன.
இதன் காரணாமாக கொரிய வேலைகளுக்கு பணியாளர்களை அனுப்புவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.