திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குணா குகைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை திடீரென அதிகரித்துள்ளது.
எங்கு திரும்பினாலும் குணா குகை பெயரும், கமல்ஹாசனின் குணா படத்தின் ”கண்மணி அன்போடு காதலன்” பாட்டும் தான் கேட்கிறது.
இதற்கு காரணம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு மலையாள திரைப்படம் தான்.
அப்படி அந்த திரைப்படத்தில் குணா குகையை வைத்து என்னதான் செய்திருக்கிறார்கள்? அந்த குகையில் அப்படி என்ன மர்மம் நிறைந்து இருக்கிறது என்று தொடர்ந்தும் பார்க்கலாம்.
கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி வெளியான, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தில் கொடைக்கானல் குணா குகையில் கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளனர்.
கேரளாவின் மஞ்சும்மல் பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு 11 நண்பர்கள் சுற்றுலா வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் அந்த குகையில் இருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்துவிட அவருக்கு என்ன ஆனது? நண்பர்களால் குகைக்குள் விழுந்த நபர் காப்பாற்றப்பட்டாரா? என்பது தான் அந்த திரைப்படத்தின் கதை.
இந்த படத்தில் தனி சிறப்பு என்னவென்றால் நடிகர் கமல்ஹாசனின் குணா திரைப்படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடல் இந்த படத்திலும் இடம்பெற்றுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்தின் மூலம் தான் இந்த குகைக்கு குணா குகை என பெயர் வந்தது.
இந்த குகையில் எடுக்கப்பட்ட கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலை இன்று வரை கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அதன் பிறகு வனத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த இந்த குகைக்குள் சென்ற பலர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்ததாலும், பலர் இங்கு விழுந்து தற்கொலை செய்துகொண்டதாலும் குகை மூடப்பட்டது.
தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் குணா குகை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே ஆர்வத்தை பெற்றுள்ளது. குறிப்பாக வெளிநாட்டவர்கள் குணா குகைக்கு படையெடுத்து வருகின்றனர்.
கொடைக்கானலில் இருந்து இந்த குகை பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
2500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகை மர்மம் மற்றும் அதிசயங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. 1821ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பி எஸ் வார்டு என்பவர் இந்த இடத்தை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த இடம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பிரபலமானதற்கு காரணம் நடிகர் கமல்ஹாசன் தான்.