NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு தேர்தல் விடுமுறை வழங்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, அரச துறை அதிகாரிகளின் விசேட விடுமுறை குறித்த நிறுவனங்களின் குறியீடு அத்தியாயம் 12, பத்தி 12/3 இல் கூறப்பட்டுள்ளபடி, பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்வதற்கு தேவையான ஒரு தொடர்ச்சியான காலம் குறைந்தபட்சம் 4 மணிநேரம் என்றும், சம்பளம் பிடித்தம் செய்யாமல் விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பின் அடிப்படையில் தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பின்றி வாக்களிக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, பணியிடத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்திற்கு 40 கிலோமீற்றர் அல்லது அதற்கும் குறைவான தூரம் இருந்தால் அரை நாள் விடுமுறையும், 40-100 கிலோமீற்றர் வரை இருந்தால் குறைந்தபட்சம் ஒரு நாள் விடுமுறையும் அளிக்க வேண்டும்.

100-150 கிலோமீற்றர் தூரம் என்றால் ஒன்றரை நாட்களும், 150 கிலோமீற்றருக்கு அதிகமாக இருந்தால் 2 நாட்களும் அவகாசம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எனினும், இதற்காக, பணியாளர்கள் உரிய விடுமுறைக் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக நிறுவன தலைவரிடம் வழங்க வேண்டும்.

அத்துடன், விசேட விடுமுறைக்கு விண்ணப்பித்த நபர்கள் மற்றும் விடுப்புக் காலத்தைக் காட்டும் ஆவணத்தைத் தயாரித்து பணியிடத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு நிறுவனங்களின் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles