NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசியக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் திடீர் விலகல் !

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ காயம் காரணமாக ஆசிய கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் இடையிலான மோதலுடன் புதன்கிழமை சுபர் 4 சுற்று ஆரம்பமாகியது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பங்களாதேஷ் அணிக்காக சதமடித்து அந்த அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ, குறித்த போட்டியில் வைத்து தொடைப் பகுதி உபாதைக்குள்ளாகினார்.

இதனால் அவர் களத்தடுப்பில் ஈடுபடவில்லை. இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட SCAN பரிசோதனையில் தசைக்கிழிவு எற்பட்டது உறுதியாகியுள்ளது.

இதனால் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரை கருத்தில் கொண்டு அவர் ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து விலகியுள்ளார். இலங்கை அணிக்கு எதிராக 89 ஓட்டங்களையும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 104 ஓட்டங்களையும் குவித்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ, இம்முறை ஆசியக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

எவ்வாறாயினும், ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகியிருப்பது பங்களாதேஷ் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்துள்ளது. இதனிடையே, அவருக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முதல் 2 போட்டிகளில் விளையாடாத லிட்டன் தாஸ் பங்களாதேஷ் அணிக்கு திரும்பி இருப்பது பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles