T20 உலகக் கிண்ணத்துக்கான ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடர் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் T20 உலகக் கிண்ணத்தில் பங்குபெறும் நாடுகள் தங்களை தீவிரமாக ஆயத்தப்படுத்தி வருவதுடன், பல நாடுகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்று பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, T20 உலகக் கிண்ணத்துக்கான ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், டி20 உலகக் கிண்ணத்துக்கான ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகளைச் சென்றடைந்தது. இம்முறை T20 உலகக் கிண்ணத்துக்கான 10 நாட்கள் பயிற்சி முகாமை ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பமாகவுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் இந்தப் பயிற்சி முகாமை டுவைன் பிராவோ உள்ளடக்கிய பயிற்சியாளர்கள் குழு கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதாகும் டுவைன் பிராவோ மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 295 போட்டிகளில் விளையாடி 6423 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 363 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். T20i கிரிக்கெட்டில் 625 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராகவும் அவர் உள்ளார்.
அதேபோல, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான டுவைன் பிராவோ தற்போது சென்னை அணியின் பயிற்சியாளர் குழுவில் ஒருவராக உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்றார். அதேசமயம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி 4 தடவைகள் ஐபிஎல் சம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். உலகளவில் T20 கிரிக்கெட்டில் முன்னணி வீரராக வலம் வந்த டுவைன் பிராவோவை பந்துவீச்சு ஆலோசகராக நியமித்துள்ளதன் மூலம் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப் பெரிய சாதகத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணி எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதி நடைபெறும் தனது முதல் போட்டியில் உகாண்டாவை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.