இத்தாலியின் நேபிள்ஸ் (Naples) நகரில் கொள்ளையடிக்க முயன்ற இலங்கையர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல் நேபிள்ஸ் நகரத்தின் நன்கு அறியப்பட்ட பகுதியான விகோ டெசிடோரியில் இடம்பெற்றுள்ளது.
32 வயதான இலங்கையர் பெல்லெக்ரினியில் (Pellegrini) உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையர் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், அதிர்ஷ்டவசமாக, அவருக்கு ஏற்பட்ட காயங்கள் தீவிரமானவை இல்லை எனவும் அவரின் உயிருக்கு ஆபத்தில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பகுதியில் அதேநாளில் 17 வயதான இளைஞன் மீதும் கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் தீவிரமான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு இருக்கின்றதா? என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் பொலிஸார் ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.