தட்டம்மை தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்று இன்று முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை முன்னெடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால தலைமையில் இடம்பெற்றது.
தட்டம்மை, ருபெல்லா தடுப்பூசி வாரத்தை முன்னிட்டு குறித்த பிரிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருக்கும்.
அத்துடன், 0704 565 656 என்ற இலக்கத்தின் ஊடாக தட்டம்மை, ருபெல்லா உள்ளிட்ட தொற்றுநோய்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தட்டம்மையை இல்லாமல் செய்த நாடாக இலங்கை காணப்பட்ட போதிலும் அண்மையில் சில பிரதேசங்களில் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
உலகில் அதிகமாக பரவும் வைரசாக இதுவுள்ளதென தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் ஹசித்த திசேரா தெரிவித்துள்ளார்.
சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ்களை விடவும் இதன் வேகம் அதிகமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இதனை தடுப்பதற்கு உள்ள ஒரே வழி தடுப்பூசி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
9 மாதங்கள் நிறைந்த குழந்தைக்கு தட்டம்மை தடுப்பூசி வழங்கப்படுவதுடன், ஏற்கனவே தடுப்பூசியை பெறாத மற்றும் ஒரு மாத்திரை மாத்திரம் பெற்றுக்கொண்ட தரப்பினரும் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகும் அவதான நிலையிலிருப்பதாக வைத்திய நிபுணர் ஹசித்த திசேரா மேலும் தெரிவித்துள்ளார்.