இமயமலைப் பிரகடனமானது தமிழர் தரப்பில் எவருடனும் ஆலோசிக்கப்படாமல் திரைமறைவில் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை நோக்கமாகக் கொண்டு செயற்படும் பல அமைப்புகள் மத்தியில் உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடானது அதிருப்தி அளிப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
“தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை நோக்கமாகக் கொண்டு செயற்படும் பல அமைப்புகள் மத்தியில், உலகத் தமிழர் பேரவை வெவ்வேறு புத்த அமைப்புக்களைச் சேர்ந்த மூத்த புத்த பிக்குகள் கொண்ட இலங்கைக்கான “சிறந்த இலங்கை சங்க மன்றத்தை” சந்தித்ததானது, பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
பிரித்தானியர்களிடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான கடந்த 75 வருடங்களாக தமிழர்கள் படிப்படியாக தங்களுக்கு உரித்தான அனைத்தையும் இழந்து வருகின்றனர்.
சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் வரலாற்றில் பௌத்த மதகுருமார்களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது.
இதன் காரணமாகவே, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் பொருட்டு தமிழ் மற்றும் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தாமல் இரத்து செய்யப்பட்டன.
இலங்கைத் தீவில் வரலாற்று ரீதியாக தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சுழற்சி மற்றும் இனப்படுகொலைக்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன. யார் ஆட்சிக்கு வந்தாலும் சிறிலங்கா அரசானது, நாட்டை ஒற்றை இன, ஒரு மொழி, மற்றும் ஒற்றை மத (mono ethnic, mono lingual, mono religious) சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதே ஆட்சியாளர்கள் கொள்கையாக கொண்டுள்ளார்கள்.