NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரண்டு தோல்விகளைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு முதலாவது வெற்றி.

நியூயோர்க் நசவ் கவுன்டி சர்வதேச விளையாட்டரங்கில் கனடாவுக்கு எதிராக நடைபெற்ற ஏ குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் விக்கெட்டுகளால் இலகுவாக வெற்றிபெற்றது.ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடைபெற்றுவரும் 9ஆவது ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விகளைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கிடைத்த முதலாவது வெற்றி இதுவாகும்.அயர்லாந்துடனான போட்டியில் மிகச் சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும், ஐக்கிய அமெரிக்காவின் எஞ்சிய இரண்டு போட்டி முடிவுகளிலேயே அதன் சுப்பர் 8 சுற்று வாய்ப்பு தங்கியிருக்கிறது.

107 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 17.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பாகிஸ்தானின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. மொத்த எண்ணிக்கை 20 ஓட்டங்களாக இருந்தபோது சய்ம் அயூப் ஆட்டம் இழந்தார்.எனினும் மொஹமத் ரிஸ்வான், அணித் தலைவர் பாபர் அஸாம் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை பலமான நிலையில் இட்டனர்.

மொஹமத் ரிஸ்வான் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தார்.உஸ்மான் கான் 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் டிலொன் ஹேலிகர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கனடா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. சீரான இடைவெளியில் கனடாவின் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க ஆரம்ப வீரர் ஆரோன் ஜோன்சன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்றார்.அவரைவிட கலீம் சானா, அணித் தலைவர் சாத் பின் ஸபார் ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.பந்துவீச்சில் மொஹமத் ஆமிர் 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 4 ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles