NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை கால்பந்து பொதுத் தேர்தல் செப்டம்பர் 16ஆம் திகதி !

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதிக்கு முன்னர் இருந்த சட்ட விதிகளுக்கு அமைய குறித்த தேர்தலை நடாத்துவதற்கான ஒப்புதலை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரனசிங்க வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இந்த தேர்தலானது சர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மேளனம் (FIFA) மற்றும் ஆசிய கால்பந்து கூட்டு சம்மேளனம் (AFC) ஆகியவற்றின் கண்காணிப்பின் கீழ் இடம்பெறும்.
இந்த வருட ஆரம்பத்தில் FIFA இலங்கை மீது விதித்திருந்த தடையை விடுவிப்பதற்கு இலங்கை மேற்கொள்ள வேண்டிய 3 அடிப்படை நிபந்தனைகளையும் நிறைவேற்றுவதற்கு இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சம்மதம் தெரிவித்திருந்தார். அதன் ஒரு கட்டமாகவே இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான பொதுத் தேர்தலை FIFA வின் சட்டதிட்டங்களுக்கு அமைய நடாத்த வேண்டும் என்பது இலங்கை மீதான தடையை நீக்க FIFA குறிப்பிட்டுள்ள மூன்றாவது நிபந்தனையாக உள்ளது.

அதேபோன்று, சில கடுமையான நிபந்தனைகளின் கீழ் இலங்கை அணியை 2026 உலகக் கிண்ண பூர்வாங்க தகுதிகாண் சுற்றில் பங்கேற்பதற்கும் FIFA விஷேட அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான இந்த தேர்தல் நடைபெறாவிடின் இலங்கை அணி குறித்த தொடரில் இருந்து நீக்கப்படும். மேலும் பொதுத்தேர்தல் இடம்பெறும்வரை இலங்கை மீதான FIFAவின் தடை நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles