இலங்கையின் முதலாவது உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) பண்டாரவளை கஹத்தேவெல பிரதேசத்தில் திறக்கப்படவுள்ளது.
பண்டாரவளை கஹத்தேவெல ஸ்ரீ சங்கராஜ விகார வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை விவசாய அமைச்சின் சிறிய அளவிலான விவசாய தொழில்முனைவோர் திட்டத்தின் (SAPP) நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இத்தொழிற்சாலை விவசாய அமைச்சரினால் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதன் நிர்மாணப் பணிகளுக்காக 100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
நாட்டில் மிகவும் பிரபலமான உணவான உருளைக்கிழங்கு கீற்றுகள் இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில் இதற்காக வருடத்திற்கு சுமார் 3,500 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
இதேவேளை இத்தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு கீற்றுகளுக்கு உள்நாட்டில் பயிரிடப்படும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படவுள்ளதுடன் ஆரம்ப கட்டத்தில் உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிகள் 250 பேரிடமிருந்து உருளைக்கிழங்கு கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது விவசாய மாதிரி கிராமமான கஹத்தேவலயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை மூலம் நாளொன்றுக்கு 1,000 கிலோ உருளைக்கிழங்கு கீற்றுகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.