(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையில் தற்போது 88,764 இலட்ச கறவை மாடுகள் மாத்திரமே இருப்பதாக கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்க இன்று (11) பாராளுமன்றத்தில் கால்நடைகள் தொடர்பில் கருத்து தெரிவித்து கேள்வியெழுப்பிய வேளையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதன்படி, இலங்கையில் 16 இலட்சத்து 12,714 கறவை மாடுகளும் 4 இலட்சத்து 70,050 எருமைகளும் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டில் இந்நாட்டின் வருடாந்தத் திரவப் பாலின் தேவை 759 மில்லியன் லீற்றர் என டி.பி ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில், கறவை மாடுகளுக்காக 3,866 ஏக்கர் மேய்ச்சல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கால்நடைகளுக்கு சரியான ஊட்டச்சத்து இல்லாமை, கால்நடை தீவனத்தின் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் தினசரி பால் உற்பத்தி குறைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தெரிவித்தார்.
நாளாந்த பசும்பால் தேவை 12 இலட்சம் லீற்றராக இருந்த போதிலும் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் அளவு 5 இலட்சம் முதல் 6 இலட்சம் லீற்றர் என விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவு குறிப்பிட்டிருந்தது.
இலங்கையில் காணப்படும் சனத்தொகையோடு ஒப்பிடுகையில் இலங்கையின் பால் தேவைக்காக வளர்க்கப்படும் கறவை மாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றமையே பால் பற்றாக்குறைக்கான பிரதான காரணமாகும் எனவும் கால்நடை பிரிவின் அண்மைய அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.