இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் ஆரம்பமாகி 300 நாட்கள் கடந்துள்ள நிலையில், பலஸ்தீனத்துக்கு ஆதரவாக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உடனடியாக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வரவேண்டும் என வலியுறுத்தினர்.
இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பமாகி 300 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், இஸ்ரேலியப்படைகளால் காஸா மீது நடத்தப்பட்டுவரும் தொடர் தாக்குதல்களைக் கண்டித்து கொழும்பைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கத்தினால் நேற்று கொழும்பில் கவனயீர்ப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தில் பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கத்தின் பிரதிநிதிகள், கிறிஸ்தவ மதத்தலைவர்கள், வடக்கு – தெற்கு ஒருமைப்பாட்டு அமைப்பின் சார்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீநாத் பெரேரா, சிறுவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
அதன்படி போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘நாம் பலஸ்தீனத்துடன் உடன்நிற்கிறோம்’, ‘உடனடி போர்நிறுத்தம் வேண்டும்’, ‘12,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்’, ‘பலஸ்தீன விடுதலை வேண்டும்’ உள்ளடங்கலான பதாதைகளை ஏந்தி தமது ஆதரவுகளை வெளியிட்டனர்.